Connect with us

Cricket

கம்பேக்-க்கு ரெடியான முகமது ஷமி – வைரலாகும் படங்கள்

Published

on

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரோடு, காயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய முகமது ஷமி சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சையை தொடர்ந்து மீண்டும் இந்திய அணியில் விளையாட தயார் நிலையில் இருப்பதை முகமது ஷமி தனது சமூக வலைதள பதிவுகள் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பான பதிவில் அவர் பயிற்சியின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைத்துள்ளார்.

கூடவே, “கையில் பந்துடன் போட்டியில் திரும்புவதை மட்டுமே மனதார நினைத்துக் கொண்டு இருக்கிறேன்,” என்று தலைப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிகிறது. மேலும், புகைப்படங்களை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முகமது ஷமி கடைசியாக களம்கண்டார். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. எனினும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மட்டும் முகமது ஷமி 24 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இவரது சராசரி 10.70, எகனாமி 5.26 ஆகும். இதில் ஒரு முறை நான்கு விக்கெட்டுகளையும், மூன்றுமுறை ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். அந்த தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி 57 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியது, அவரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

அந்த தொடரில் வலியுடன் பந்துவீசிய முகமது ஷமி, தனது காயம் போட்டியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அளவுக்கு பார்த்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடவில்லை.

google news