இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. கிடைத்த வாய்ப்புகளின் போதெல்லாம், தன்னை முழுமையாக நிரூபித்ததோடு அணிக்கு தேவையான முடிவு கிடைப்பதை உறுதிப்படுத்திக் காட்டியவர் ஷமி. கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் தனக்கென முக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார் ஷமி.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக அணியில் வாய்ப்பு கிடைக்க அணியில் சேர்க்கப்பட்ட ஷமி உலகக் கோப்பை தொடரில் அபாரமாக பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினார். இந்த தொடர் பற்றிய கேள்விக்கு பதில் முகமது ஷமி ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்-ஐ நக்கல் செய்து கருத்து தெரிவித்தார்.
“எனக்கு அது பழகிவிட்டது. 2015, 2019 மற்றும் 2023 ஆண்டுகளில் எனக்கு சரியான துவக்கம் கிடைத்தது. எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, நானும் சிறப்பாக பந்துவீசினேன். கடவுளுக்கு நன்றி, அவர்கள் அதன்பிறகு என்னை அணியில் இருந்து நீக்குவது பற்றி யோசிக்கவே இல்லை. இதனை நீங்கள் கடின உழைப்பு என்றும் கூறலாம், ஆனால் நான் வாய்ப்புக்காக எப்போதும் தயாராக இருந்தேன்.”
“நீங்கள் முழுமையாக தயார் நிலையில் இருந்தால் தான், உங்களால் நிரூபிக்க முடியும். இல்லையெனில், உங்களால் களத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்கு மட்டும்தான் ஓட முடியும். வாய்ப்பு கிடைக்கும் போதே, அதனை பறித்துக் கொள்வது தான் நல்லது,” என்று முகமது ஷமி தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் என இந்திய அணியின் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் என இருவரும் கலந்து கொண்டிருந்தனர். முகமது ஷமி இவ்வாறு கூறுவதை கேட்டதும் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.