டெல்லி பிரீமியர் லீக் போட்டியில் ஆயுஷ் பதோனி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஜோடி 286 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்து அசத்தியது. இது சர்வதேச டி20 வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்டனர்ஷிப் ஸ்கோர் ஆகும். இருவரின் அதிரடி ஆட்டம் காரணமாக பிரியான்ஷ் ஆர்யா இடம்பெற்றிருந்த சவுத் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை குவித்தது.
இந்த இன்னிங்ஸில் இருவரும் எதிரணி பந்துவீச்சில் 29 சிக்சர்களை விளாசினர். இதில் பிரியான்ஷ் 50 பந்துகளில் 120 ரன்களை விளாசினார். பதோனி மறுமுனையில் 55 பந்துகளில் 165 ரன்களை குவித்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் இதன் மூலம் பிரியான்ஷ் ஆர்யா ஏராளமான சாதனைகளை படைத்த போதிலும், ஐபிஎல் குறித்த கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஆர்யா, “சர்வதேச டி20 போட்டிகளை பொருத்தவரை, நான் வரவிருக்கும் சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடருக்காக கவனம் செலுத்தி வருகிறேன். என் மாநிலத்துக்காக விளையாட அது பெரிய வாய்ப்பாக இருக்கும். எனது எண்ணம் முழுக்க அங்கு சிறப்பாக விளையாடி, என் அணிக்காக போட்டிகளை வெற்றி பெற செய்வது மட்டும் தான். அதைத் தாண்டி எதையும் நினைக்கவில்லை.”
“ஐபிஎல் ஏலம் மிகப்பெரியது, அத்தகைய விஷயத்தை மனதில் வைத்திருப்பதை நம்மை நாமே அழுத்தத்திற்கு கொண்டு செல்வதற்கு சமமாக அமைந்துவிடும். இதனால் தற்போதைக்கு நான் அதைப்பற்றி அதிகம் நினைப்பதில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாட பணியாற்றி வருகிறேன்.”
“பேட்டிங்கில், முடிந்தவரை அதிகளவு ஓடுவதற்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொண்டு வருகிறேன். அதில் இன்னமும் முன்னேற பணியாற்றி வருகிறேன். ஸ்டிரைக் ரேட் பற்றி அதிகம் நினைக்காமல் அணிக்கு என்னால் முடிந்த வரையில் பங்காற்ற வேண்டும் என்று நினைக்கிறேன், என தெரிவித்தார்.