இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். மும்பை அணியில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். கேப்டன் மாற்றத்தை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த 2024 ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை. ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025 ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா வேறு அணியில் இணைவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ரோகித் சர்மா வரும் பட்சத்தில் அவரை தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள ஐபிஎல் அணிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்று பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த சஞ்சய் பங்கர் தெரிவித்தார். மேலும், தங்களிடம் போதுமான பணம் இருந்தால் அவரை அணியில் சேர்ப்பதற்கு முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார்.
“எங்களது பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பொருத்து தான் முடிவு எடுப்போம். ரோகித் ஏலத்திற்கு வரும் பட்சத்தில், அவருக்கான விலை நிச்சயம் அதிகமாகவே இருக்கும்,” என்று சஞ்சய் பங்கர் தெரிவித்தார்.
முன்னதாக அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்த இந்திய அணியின் ஷிகர் தவானுக்கு ரோகித் சர்மா வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், “அறையை பகிர்ந்து கொண்டதில் துவங்கி, களத்தில் ஒன்றாக விளையாடியவது வரை. மறுமுனையில் இருந்து கொண்டு நீ எப்போதும் என் பணியை எளிமையாக மாற்றி இருக்கிறாய். தி அல்டிமேட் ஜாட்,” என்று குபிப்பிட்டு இருந்தார்.