இந்திய – இலங்கை அணிகளிக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி நேற்றிரவு நடந்தது. பல்லிகாலே மைதானத்தில் நடந்து போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து நூற்றி முப்பத்தேழு ரன்களை எடுத்தது. நூற்றி முப்பத்தி எட்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்கம் அதிரடியாக இருந்தது.
ஓபனர்களான நிசாங்கா மற்றும் குசால் மென்டிஸ் இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபக்கமும் சிதற அடித்தனர். இந்த இருவரும் முதல் விக்கெட்டுக்கு ஐம்பத்தி எட்டு ரன்களை எடுத்தனர். அடுத்து களமிறங்கிய குசால் பரேராவும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை கிறங்கடித்தார். இருபது ஓவர்கள் முடிவில் இலங்கை அணி நூற்றி முப்பதேழு ரன்களை எடுத்தது. இதனால் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.
போட்டி டிராவானதை அடுத்து சூப்பர் ஒவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதிலும் இலங்கை அணி முன்னாள் உலக சாம்பியன் என்பதை மறந்து புதிதாக கிரிக்கெட் விளையாடும் அணியைப் போலவே விளையாடியது. இந்த ஓவரில் தட்டு தடுமாறிய இலங்கை அணி முடிவில் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த இரண்டு ரன்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை வீரர்கள் நேற்று சேஸிங்கின் போது ரன் எடுக்க தடுமாறியதையும், சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்த விதமும் போட்டியை பார்த்தவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் படியே அமைந்தது.
சூப்பர் ஓவரில் மூன்று ரன்கள் என்ற மிக எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்திலேயே வெற்றி பெற்றது. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், கேப்டனுமான சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே இந்த இலக்கை எட்ட உதவினார்.
இலங்கை அணியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள் அந்நாட்டு ரசிகர்களும், நெட்டிசன்களும். சொந்த மண்ணில் விளையாடிய போதும் இலங்கையின் தடுமாற்றத்தை தீவரமாக ஆராய்ந்து பார்த்தால் உலக கோப்பை போட்டி தொடரில் கெத்து காட்டி சாம்பியன் பட்டத்தை எதிர்கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.