Finance
ரூ. 4 லட்சம் வரை Extra.. வேற லெவலில் வட்டியை வாரிவழங்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்..!

இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட ஏராளமான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான வட்டியை வழங்குகின்றன. இவற்றில் ஃபிக்சட் டெபாசிட் என்ற FD-க்கள் மிகவும் பிரபலம். இவை அரசாங்க வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் மற்றும் வங்கியில்லா நிதி நிறுவனங்களும் கூட இந்தியாவில் FD வசதியை வழங்கி வருகின்றன.
அதிக பலன்களை கொடுப்பதில் அஞ்சல் அலுவலகங்களில் உள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை மிகவும் பிரபலம். ஐந்து ஆண்டுகளில் அபாயம் குறைந்த முதலீடு செய்ய விரும்புவோர், எந்த திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிக்கலான காரியம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் முதியவர்களுக்கான பிரத்தியேக திட்டம் ஆகும். இது நிரந்தர வருவாய் எதிர்பார்க்கும் முதியவர்களுக்கு சரியான ஒன்றாக இருக்கும். இந்த திட்டத்தில் ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்யும் போது, ஐந்து ஆண்டுகளில் ரூ. 14 லட்சத்து 10 ஆயிரம் வரை கிடைக்கும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் என்ற மற்றொரு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம் ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 7.7 சதவீதம் வரையிலான வட்டியை வழங்கும். இதில் வட்டித் தொகை ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டு, முதிர்வு காலத்தில் அந்த தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் ரூ. 10 லட்சம் முதலீடு செய்யும் போது ஐந்து ஆண்டுகள் முடிவில் ரூ. 14 லட்சத்து 49 ஆயிரத்து 034 வரை பெற முடியும். இது முதலீடு செய்ததை விட ரூ. 4 லட்சத்து 49 ஆயிரத்து 034 அதிகம் ஆகும். வருமான வரித்துறை சட்டப்பிரிவு 80C-இன் கீழ் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கான முதலீடுகளுக்கு வரி பிடித்தம் செய்யப்படும்.
நிலையான வைப்பு என்கிற FD-க்கள் குடிமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வெவ்வேறு வகையான வட்டி வழங்குகின்றன. நாடு முழுக்க தனியார் வங்கி மற்றும் அரசு வங்கிகள் FD வட்டியை மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் வழங்குகின்றன. முக்கிய வங்கிகள் பொதுவாக சாதாரண குடிமக்களுக்கு 7.10 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதமும் வழங்குகின்றன.
மூத்த குடிமக்கள் FD-யில் ரூ. 10 லட்சம் முதலீடு செய்யும் போது 7.60 சதவீதம் வட்டி சேர்த்து ஐந்து ஆண்டுகளில் ரூ. 14 லட்சத்து 57 ஆயிரத்து 081 பெற முடியும். இதில் ரூ. 4 லட்சத்து 57 ஆயிரத்து 081 வட்டி கிடைக்கும். இதில் சாதாரண குடிமக்களுக்கான பயன் இதைவிட சற்று குறைவாகவே இருக்கும்.
இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் முதலீடு திட்டத்தை தேர்வு செய்யும் முன், ஒவ்வொரு திட்டத்தில் கிடைக்கும் பயன்களை ஒப்பிட்டு பார்ப்பது நல்லது.
