கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி முன்னூற்றிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் முண்டக்காய், மெப்பாடி, சூரல் மலை பகுதிகளில் மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணியில் பெண் மேஜர் ஒருவர் உட்பட ஆண் வீரர்கள் பலரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகள் மேற்கொள்வதில் அதிக சிரமம் இருந்து வந்த போதும் இந்திய ராணுவ வீரர்கள் ஆற்றலுடன் செயல் பட்டு வயநாட்டில் இயல்பு நிலை திரும்பி வர தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர்கள் செயலைப் பார்த்து தன்னையும் மீட்புக்குழுவில் இணைத்துக் கொள்ள ராணுவத்திற்கு மூன்றாம் வகுப்பு மாணவன் விடுத்துள்ள கோரிக்கை கடிதம் பற்றிய செய்தி வைரலாகி வருகிறது.
தனது கடிதத்தில் ராணுவ வீரர்கள் பிஸ்கட்களை மட்டுமே சாப்பிடுவதை வீடியோவில் பார்த்ததாகவும். அதனை மட்டுமே சாப்பிட்டு விட்டு சவாலான பணிகளை செய்து வருகிறார்கள், மீட்புப் பணியில் ஈடுபடுவதை பார்த்து தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும், அதனால் ராணுவத்திற்கு மகிழ்ச்சியுடன் சல்யூட் அடித்துக் கொள்வதோடு, தான் ராணுவத்தில் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் வகுப்பு மாணவன் ரயானின் இந்தக் கோரிக்கை கடிதத்திற்கு இந்திய ராணுவம் தனது பதிலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
சிறுவன் ரயானின் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாக தொட்டன. இக்கட்டான காலங்களில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு உள்ளோம். நீங்கள் அனுப்பிய கடிதம் இந்தப் பணியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
உங்களைப் போன்ற ஜாம்பவான்கள் ராணுவத்தில் இணைவது பெருமையே. நீங்கள் ராணுவ சீருடை அணிந்து எங்களின் பக்கத்தில் நிற்கும் நாளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்று பட்டு தேசத்தை பெருமை படுத்துவோம் என தனது பதிலை சொல்லியிருக்கிறது இந்திய ராணுவம்.