மாங்காட்டில் நடந்த புதிய உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் சொன்ன விஷயம் தான் ட்ரெண்டி டாக்காக மாறி வருகிறது. நடிகர் விஜய் நடித்துள்ள “தி கோட்” படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அமைச்சர் சொல்லிய கருத்து பேசும் பொருளாக மாறியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனது படங்களுக்கு இருனூற்றி ஐம்பது கோடி ரூபாய் சம்பளமாக வாங்கும் நடிகரின் படம் வெளியாகும் போது டிக்கெட்டின் விலை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படிப்பட்ட நடிகரால் நாட்டை காப்பாற்ற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
விழாவில் அமைச்சர் நடிகரின் சம்பள விஷயம் மற்றும் டிக்கெட் விலை என சூசகமாக யாரைப் பற்றி குறிப்பிட்டிருப்பார் என்பது தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பேச்சாக மாறியுள்ளது.
அமைச்சர் பேசும் போது சொன்ன வார்த்தைகள் நடிகர் விஜய்க்கு ஒத்துப்போவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் கருத்தாக பார்க்கப்பட்டு வருகிறது. காரணம் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள “தி கோட்” படம் வெளியாக இருப்பதால் கூட அப்படி பார்க்கப்படுகிறது.
நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தன் மக்களின் நல்வாழ்விற்காக போராடுவதையே லட்சியமாக கொண்டு செயல்கள் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தன் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினை துவங்கியுள்ளார் விஜய்.
அநேகமாக நடிகர் விஜயை மனதில் வைத்துக் கொண்டுதான் அமைச்சர் இப்படி பேசியிருப்பார் என்ற கருத்துக்களும் பரவலாக வலம் வரத்துவங்கியுள்ளது.
டிக்கெட்டின் விலை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது இந்த நடிகரா நாட்டை காப்பாற்றப்போகிறார் என சூசகமாக அமைச்சர் எந்த நடிகரைப் பற்றி சொல்லியிருந்தாலும், ஆட்சியில் இவர்கள் தானே இருக்கிறார்கள், சினிமா டிக்கெட் விலை இந்த அளவு உயர்த்தி விற்கப்படுவதை ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியையும் எழவைத்துள்ளது அமைச்சர் தா.மோ.அன்பரசனின் இந்த சூசக பேச்சு.