தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தளபதி’ என செல்லமாக அழைக்கப்படுபவருமான நடிகர் விஜய் நடித்துள்ள “கோட்” படம் வருகிற ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் ரீலீஸாக உள்ளது. அரசியல் பிரவேசம் மேற்கொண்ட பிறகு ரிலீஸாக உள்ள விஜயின் முதல் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
தனது கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் விஜய். சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சிகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என சுட்டிக்காட்டி பேசி நீட் தேர்வு குறித்த தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்திருந்தார் விஜய்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள “கோட்” படத்தை வரவேற்று ரசிகர்கள் பேனர் மற்றும் கட்-அவுட் வைப்பதற்கு இது வரை அனுமதி வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த செய்தியை பிரபல தமிழ் மாலை நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தியேட்டர்களில் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.
தங்களது விருப்ப நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது பேனர்கள், கட்-அவுட்கள் வைத்து படங்களை வரவேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்து இருக்கின்றார்கள் ரசிகர்கள்.
இப்படிப்பட்ட நிலையில் படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் தியேட்டர்களில் பேனர் வைத்து “கோட்” படத்தை வரவேற்று கொண்டாட முடியாமலேயே போய் விடுமா? என்ற அச்சம் நடிகர் விஜயின் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
நடிகர் விஜயின் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வலை தளங்களில் கொட்டித்தீர்த்து வருவதாகவும் நாளிதழில் வெளியிட்டுள்ள செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.