இலங்கை அணியுடனான மூன்று இருபது ஓவர் போட்டிகள் மற்றும் மூன்று ஐம்பது ஓவர் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இருபது ஓவர் தொடரை ஏற்கனவே வென்றிருந்தது. சூர்ய குமார் யாதவ், தான் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்திக் காட்டினார்.
இருபது ஓவர் உலகக்கோப்பையை வென்றுக் கொடுத்த ரோஹித் சர்மா ஐம்பது ஓவர்கள் கொண்ட ஒரு நாள் தொடருக்கு இந்தியாவை வழி நடத்துகிறார். கொழும்பு பிரமதாசா மைதானத்தில் வைத்து நடந்த முதலாவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி சமமாக டிராவில் முடிவடைந்தது.
இதனால் இரண்டாவது போட்டியின் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் கிளம்பியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்ணிலை பெறும் என்பதால்.
நேற்று பிரேமதாசா மைதானத்தில் வைத்து பகல் – இரவு ஆட்டமாக இரண்டாவது போட்டி நடத்தப்பட்டது. இலங்கை அணி முதலில் பேட் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் இலங்கை அணி இரு நூற்றி நாற்பது ரன்களை குவித்தது. ஒன்பது விக்கெட்டுகளை இழந்து இந்தியாவிற்கு இரு நூற்றி நாற்பத்தி ஓரு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை இந்தியாவுக்கு கொடுத்தது இலங்கை.
துவக்க வீரரும் இந்திய அணித்தலைவருமான ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி நாற்பத்தி நான்கு பந்துகளில் அறுபத்தி நான்கு ரன்களை குவித்தார். இதில் நான்கு சிக்ஸர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும்.
மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் முப்பத்தி ஐந்து ரன்களை குவித்தார். அக்சர் பட்டேலைத் தவிர வேற யாரும் பெரிதாக சோபிக்காத நிலையில் இந்திய அணி நாற்பத்தி இரண்டு புள்ளி இரண்டு ஓவர்களில் இரு நூற்றி எட்டு ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
காயத்தின் காரணமாக நேற்றைய போட்டியிலிருந்து விலகிய ஹசரங்காவிற்கு பதிலாக அணியில் இடம் பிடித்த சுழல் பந்து வீச்சாரளர் ஜெஃப்ரி வந்தர்சே பத்து ஓவர்கள் வீசி முப்பத்தி மூன்று ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆறு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்து இலங்கை அணி முதல் போட்டியை சமன் செய்தும், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றும் எழுச்சி பெற்றுள்ளது. மாறாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதியான இந்திய அணி இலங்கை உடனான தொடரில் தடுமாறி வருகிறது.
நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, கோலி இருவரும் இருந்தும் இந்திய அணியை ஆட்டம் கான வைத்து அசத்தி வருகிறது இலங்கை அணி. இலங்கை அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும், இந்திய அணி வென்றால் இரு அணிகளும் தலா ஒரு, ஒரு வெற்றி பெற்று கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.