Connect with us

Cricket

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு… அதிர்ச்சி தகவல் சொன்ன நிக்கோலஸ் பூரன்

Published

on

வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்படும் நிக்கோலஸ் பூரன் தனது 29-வது வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார். முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் – பேட்டர் ஹென்ரிட்ச் கிளாசன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இந்த வரிசையில், தற்போது நிக்கோலஸ் பூரன் தனது ஓய்வை அறிவித்து இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இனி பூரன் விளையாட மாட்டார் என்ற நிலையில், அவர் தொடர்ந்து பிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடுவார். தேசிய அணிக்காக விளையாடாமல் பிரான்சைஸ் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் இவரது முடிவு எதிர்காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் போக்கு எப்படி இருக்கும் என்ற கவலையை கிரிக்கெட் வல்லுநர்கள் மீது ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து, பிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்துள்ளனர். சிலர் தங்களது முக்கிய ஃபார்ம் முழுவதையும் பிரான்சைஸ் கிரிக்கெட்டில் பயன்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் பூரன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், இவர் ஓய்வை அறிவித்து பிரான்சைஸ் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த இருப்பது கிரிக்கெட் வீரர்களின் புதிய பயணத்தில் மற்றொரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

ஓய்வு பற்றிய தகவலை நிக்கோலஸ் பூரன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “நீண்ட யோசனைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்க நான் முடிவு செய்து இருக்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாம் நேசிக்கும் இந்த விளையாட்டு அதிக மகிழ்ச்சி, நோக்கம், மறக்க முடியாத நினைவுகள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மக்களுக்காக விளையாடும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது. அந்த மரூண் நிற ஆடையை அணிந்திருப்பது, தேசிய கீதத்திற்காக நிற்பது, களத்தில் நின்ற ஒவ்வொரு முறையும் என்னால் முடிந்த எல்லாவற்றையும் கொடுத்ததை வார்த்தைகளில் தெரிவிப்பது மிகவும் கடினம். கேப்டனாக அணியை வழிநடத்தியது என் மனதில் மிகவும் நெருக்கமாக இருக்கும்.”

“ரசிகர்களுக்கு- உங்களின் அளவுகடந்த அன்புக்கு மனமார்ந்த நன்றி. கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் என்னை தூக்கிப்பிடித்துள்ளீர்கள். என் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக அணியினருக்கு – இந்த பயணத்தில் என்னுடன் இருந்ததற்கு நன்றி. உங்களது நம்பிக்கை மற்றும் ஆதரவு தான் என்னை இவ்வளவு தூரம் கடக்க செய்துள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.

google news