Cricket
ஐபிஎல் 2026-ல் ஆர்சிபி அணிக்கு தடை? வெளியான முக்கிய தகவல்

ஐ.பி.எல். தொடர் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்தே கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து, கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஏக்கத்தை தகித்துக் கொள்ளும் வகையில், ஆர்.சி.பி. அணி இந்த ஆண்டு கோப்பையை வென்று அசத்தியது. ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்றதை விட, அந்த அணி வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத அளவுக்கு துயரான சம்பவம் அரங்கேறியது.
நட்சத்திர வீரரான விராட் கோலி மற்றும் ஆர்.சி.பி. அணியினருடன் வெற்றியை கொண்டாட ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ஆர்.சி.பி. ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தை நோக்கி படையெடுத்தனர். வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படாததை அடுத்து, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு, இழப்பீடு தொகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து ஆர்.சி.பி. அணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி. நிர்வாகம், வெற்றி கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் உள்பட மொத்தம் நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கர்நாடக மாநில கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளர் மற்றும் பொருளாளர் தங்களது பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். 2026 தொடரில் ஆர்.சி.பி. அணிக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. இறுதி முடிவை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசல் குறித்து ஆர்.சி.பி. அணியிடம் பி.சி.சி.ஐ. விசாரணை நடத்தும் என்றும், விசாரணையில் யார் மீது தவறு உள்ளது என்பதை பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
