Cricket
ஆர்சிபி அணி விற்பனைக்கு வருதா? உரிமையாளர் கொடுத்த தடாலடி பதில்… என்ன தெரியுமா?

ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) கோப்பையை வென்றது முதல் அந்த அணி தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணி எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி ஏற்பாடு செய்த வெற்றிக் கொண்டாட்டம் 11 ரசிகர்களின் உயிரை காவு வாங்கியது. ஆர்சிபி வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுகூட அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், ஆர்சிபி மீது கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் ஆர்சிபி நிர்வாகத்தினர், வெற்றி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிறுவனம் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்சிபி அணி மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், ஆர்சிபி அணிக்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.
இந்த வரிசையில் ஆர்சிபி அணி விற்பனைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி உரிமையாளரான யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ்-இன் பங்குகள் விலை 3 சதவீதம் வரை அதிகரித்தன. யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ்-இன் தாய் நிறுவனமான டியாகோ ஆர்சிபி அணியின் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் வேகமாக பரவின. ஐபிஎல் 2025 வெற்றியைத் தொடர்ந்து அணியை விற்பனை செய்யும் முடிவினை டியாகோ எடுத்துள்ளதாக கூறப்பட்டது.
ஆர்சிபி அணி விற்பனைக்கு வருவது பற்றி தகவல்களை அறிந்து அந்த அணி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஆர்சிபி அணியின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக நீங்கள் ஜூன் 10-ம் தேதி அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கவே இந்த அறிக்கை. அதன்படி ஆர்சிபி அணியின் பங்குகளை விற்பனை செய்வதாக வெளியான தகவல்கள் அனைத்தும் யூகங்கள் அடிப்படையில் பரப்பப்படுகின்றன. நாங்கள் இது தொடர்பாக எந்த பரிசீலனையிலும் ஈடுபடவில்லை,” என்று தெரிவித்துள்ளது.
