latest news
ஆப்பிள், ஆப்பிள் விஷன் ப்ரோ கண்களாலேயே கட்டுப்பத்தலாம்.. ஆப்பிள் விஷன் ப்ரோ-வில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..?

2007 ஆம் ஆண்டு ஐபோன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய அறிமுகம் சமீபத்திய WWDC 2023 நிகழ்வில் அரங்கேறியது. ஆப்பிள் விஷன் ப்ரோ என அழைக்கப்படும் புதிய சாதனம், அறிமுகமான நொடி முதல் தற்போது வரை உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு லீக் மற்றும் ரெண்டர்களின் மூலம் அறியப்பட்டு வந்த ஆப்பிள் ஏ.ஆர். மற்றும் வி.ஆர். ஹெட்செட் இந்த ஆண்டு WWDC நிகழ்வில் உண்மையாகி இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த தலைமுறை சாதனத்திற்கு ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ என்று பெயரிட்டுள்ளது. புதிய சாதனம் பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

apple vision pro
ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ சாதனத்தை ஸ்பேஷியல் கம்ப்யுட்டர் என்று அழைக்கிறது. முற்றிலும் புதிய ஸ்பேஷியல் கம்ப்யுட்டர் சாதனம்- டிஜிட்டல் தரவுகளை நிஜ உலகில், மிக நேர்த்தியாக இணைத்து, எவ்வித சிரமமும் இன்றி பயனர்கள் நிஜ உலகில் மற்றவர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க செய்கிறது. இந்த ஹெட்செட் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மீது விர்ச்சுவல் உலகை மிக நேர்த்தியாக உருவாக்குகிறது.
அளவில் மிக மெல்லியதாக காட்சியளிக்கும் விஷன் ப்ரோ தோற்றத்தில் ஸ்கை காகில்ஸ் போன்று காட்சியளிக்கிறது. இதன் முன்புற பேனல் டிண்ட் செய்யப்பட்டு, இதனை அணிபவருக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்கிறது. இந்த ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பேண்ட் மற்றும் டயல் வழங்கப்படுகிறது.

apple vision pro
ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்போரும், விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ பயன்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் ஜெய்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. விஷன் ப்ரோ மாலில் இரண்டு மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இரு டிஸ்ப்ளேக்களும் 4K ரெசல்யூஷனில், ஸ்டாம்ப் அளவிலேயே உள்ளன. அகலமான தோற்றத்தை அனுபவிக்க செய்யும் நோக்கில், டிஸ்ப்ளேக்களை நீட்டிக்க மூன்று லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இதில் மொத்தமாக 12 கேமராக்கள், 5 சென்சார்கள் மற்றும் 6 மைக்ரோபோன்கள் உள்ளன. இதில் உள்ள கேமராக்கள் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதி வழங்குகின்றன. இரண்டு ஐ.ஆர். கேமராக்கள், எல்இடி லைட்கள் கண்களை டிராக் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன. ஆப்பிள் விஷன் ப்ரோ மாடல் M2 சிப் மற்றும் புதிய R1 சிப் மூலம் இயங்குகிறது. இவை தரவுகளை அதிவேகமாக இயக்கி, ஹெட்செட் சீராக இயங்குவதை உறுதி செய்கின்றன.

apple vision pro
இந்த ஹெட்செட் விஷன் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இந்த இண்டர்ஃபேஸ் முப்பரிமாண தோற்றத்தை வழங்குகிறது. இது ஐபோன் மற்றும் ஐபேட் செயலிகளின் சப்போர்ட் கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஹெட்செட் ஆப்பிள் ஆப்களை மட்டுமே இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. விஷன் ப்ரோ மாடலின் அம்சங்களை கண்களாலேயே கட்டுப்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெட்செட்-இன் மேல்புறம் டிஜிட்டல் கிரவுன் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது.
முழு சார்ஜ் செய்தால் இந்த ஹெட்செட் இரண்டு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. பிளக்-இன் செய்த நிலையில், நாள் முழுக்க பயன்படுத்த முடியும். மற்ற ஹெட்செட்களை போன்று இல்லாமல், இதனை பயன்படுத்துவோரின் கண்களை மற்றவர்களும் பார்க்கலாம். விஷன் ப்ரோ ஹெட்செட் மூலம் திரைப்படம் பார்க்கும் போது திரையரங்கில் இருந்து பார்ப்பதை போன்ற அனுபவம் கிடைக்கும். இத்துடன் ஸ்பேஷியல் ஆடியோ அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன்களில் ஃபேஸ் ஐடி அம்சம் போன்றே இதில் ஆப்டிக் ஐடி அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இது பயனரின் கண்களை ஸ்கேன் செய்து ஹெட்செட்-ஐ அன்லாக் செய்கிறது. ஆப்டிக் ஐடி விவரங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு உள்ளது.
