latest news
கால தாமதமாகும் காண்டூர் கால்வாய் பணிகள்…கண்டனம் தெரிவித்த எதிர் கட்சித் தலைவர்…
பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் திருமூர்த்தி அணையை சென்றடையும் வகையில் அதற்கு முன்னரே காண்டூர் கால்வாயில் ஆண்டு தோறும் பராமரிப்பு பணிகள் நடத்தப்படும் என்பதை சுட்டிக்காட்டி, இந்தாண்டு விடியா திராவிட முன்னேற்றக் கழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் மெத்தனத்தை காட்டி வருவதாக தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தனது கண்டன அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ஆண்டு தோறும் ஜூலை மாதம் இருபதாம் தேதிக்குள் காண்டூர் கால்வாயில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலை கடைசியில் பரம்பிக்குளம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திருமூர்த்தி அணையைச் சென்றடைந்தவுடன் பாசனத்திற்கு திறந்து விடப்படும்.
இப்படி திறந்து விடப்படும் தண்ணீரினால் கோயம்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள் சுமார் தொன்னூற்றி ஐந்து ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடையும் என்று சொல்லியிருக்கிறார் பழனிசாமி.
தற்சமயம் பெய்து வரும் மழையால் அணை விரைவில் நிரம்பும் நிலை இருப்பதாக தெரிகிறது. ஜூலை மாதத்தில் முடிக்கப் பட வேண்டிய பராமரிப்பு பணிகள் ஆகஸ்ட் மாத இரண்டாம் வாரம் வரை நீடிக்கும் என்பதாலும் குறித்த காலத்தில் பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அணை முழுக்கொள்ளவவை எட்டியதும், உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்கவும், பாசணத்திற்கு தண்ணீர் சென்றடைய காண்டூர் குளத்தின் பணிகளை விரைந்து முடிக்கவும் வலியுறுத்துவதாகவும், குறித்த காலத்தில் 2 -ஆம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடவும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் எனச் சொல்லி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.