latest news
வீக் என்ட் ஆரம்பம்…வரவேற்க தயார் நிலையில் குற்றாலம்…
குற்றாலத்தில் சீசன் காலம் வந்து விட்டாலே அது குதூகலம் தான். தமிழகத்தின் தென் கோடி மாவட்டமான தென்காசியில் இந்த அருவிகள் அமைந்திருந்தாலும், குற்றாலத்தின் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்த நாடு முழுவதுமுள்ள சுற்றுலாப் பிரியர்கள் தவறாமல் ஆண்டு தோறும் சீசன் நேரத்தில் இங்கு வருகை புரிவதை கடமையாக நினைத்து வந்து சேர்கிறார்கள். இதனால் பல நேரங்களில் மக்கள் கூட்டத்தால் குலுங்கும் குற்றாலம்.
தென் மேற்கு பருவ மழையின் தீவிரம், மலைப் பகுதிகளில் பெய்த மழை இதனால் இந்தாண்டு குற்றாலத்தில் சீசன் அமோகமாக இருந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை சில நாட்கள் போடப்பட்டிருந்தாலும், தன்னால் இயன்ற இன்பத்தை தொடர்ந்து வாரி வழங்கி வருகிறது இயற்கை அன்னையின் வரப்பிரசாதமான குற்றால அருவிகள்.
கடந்த வார துவக்கத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக விதக்கப்பட்ட அடுத்தடுத்த தடை உத்தரவினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட பிறகு எப்போதும் போல கலைகட்டத்துவங்கியது குற்றாலம். அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து விழுந்த தண்ணீர் ஆனந்தத்தை அள்ளித்தந்தது குற்றாலத்தின் குளுமையை அனுபவித்து குளித்து மகிழ வந்த கூட்டத்திற்கு.
இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி குற்றாலத்தின் பிரதான அருவிகளான ஃபைவ் ஃபால்ஸ், மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அனைத்திலும் குளித்து மகிழ ஏதுவான சூழலே இருந்தது. காற்றின் வேகம் கூடிய போதும் சாரல் தென்பட வில்லை. வெயிலின் தாக்கமும் பெரிதாக இல்லை. வீக் என்டாக பார்க்கப்படும் சனிக்கிழமையான இன்றைய தினம் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. இதே போல விடுமுறை தினமான நாளையும் கூட்டம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.