tech news
மலிவு விலை, மிலிட்டரி பாதுகாப்பு – புது போன் அறிமுகம்
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனை சத்தமின்றி அறிமுகம் செய்தது. ஒப்போ A3x என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. மிலிட்டரி தர பாதுகாப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 5100mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் MIL-STD 810H தர சான்று பெற்றுள்ளது. இது அதிக தரமான பில்டு மற்றும் நீரில் அதிகமுறை விழுந்தாலும் பாதிப்பின்றி சீராக இயக்கும் தன்மை கொண்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.67 இன்ச் HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 6 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 6300 ஆக்டா கோர் பிராசஸர், Mali-G57 MC2 GPU வழங்கப்பட்டு இருக்கிறது.
மெமரி பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் 4GB ரேம், 64GB மெமரி மற்றும் 4GB ரேம், 128GB மெமரி என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 32MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி LTE, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், GPS, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. 5100mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் 45W சார்ஜிங் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் ஒப்போ A3x ஸ்மார்ட்போன் ஸ்டேரி பர்பில், ஸ்பார்கிள் பிளாக் மற்றும் ஸ்டார்லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 64GB மெமரி மாடல் விலை ரூ. 12,499 என்றும் 128GB மெமரி மாடல் விலை ரூ. 13,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஒப்போ வலைதளம் மற்றும் ரீடெயில் ஸ்டோரில் துவங்குகிறது.