automobile
212கிமீ ரேஞ்ச் வழங்கும் சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்
பெங்களூருவை சேர்ந்த சிம்பில் எனர்ஜி நிறுவனம், தனது முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம்- சிம்பில் ஒன் மாடலை 2021 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக சிசம்பில் எனர்ஜி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடலை விட இதில் ஏராளமான அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுவரை சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க 18 மாதங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சிம்பில் ஒன் மாடலில் PMSM மோட்டார் உள்ளது. சிம்பில் எனர்ஜி காப்புரிமை பெற்று இருக்கும் இந்த மோட்டார் 8.5 கிலோவாட் பீக் / 4.5 கிலோவாட் திறன் மற்றும் 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 2.77 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
இத்துடன் 7 இன்ச் 1024×600 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள இன்டர்ஃபேசை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இது 4ஜி மற்றும் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதை கொண்டு அழைப்புகளை ஏற்க முடியும். இதோடு பாடல்களையும் கேட்க முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில்- இகோ, ரைடு, டேஷ் மற்றும் சோனிக் என மொத்தம் நான்கு மோட்கள் உள்ளன.
மேலும் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது பொருத்தப்பட்ட நிலையில், போர்டபில் முறையில் கழற்றி மாட்டிக்கொள்ளும் முறையிலும் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 212 கிலோமீட்டர் வரை செல்லும் என்று IDC சான்று பெற்று இருக்கிறது. ஹோம் சார்ஜிங் மூலம் இந்த ஸ்கூட்டரை 54 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.
சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நம்ம ரெட், பிரேசன் பிளாக், அஸ்யூர் புளூ, கிரேஸ் வைட், பிரேசன் எக்ஸ் மற்றும் லைட் எக்ஸ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 54 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 58 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விலையில் 750 வாட் சார்ஜரும் வழங்கப்படுகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வினியோகம் ஜூன் 6 ஆம் தேதி துவங்குகிறது. இதன் வினியோகம் படிப்படியாக நீட்டிக்கப்பட இருக்கிறது.