tech news
5 Mins-ல முழு சார்ஜ்: ரியல்மி 300W ரெடி
ரியல்மி நிறுவனம் தனது முற்றிலும் புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிவிக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த அறிமுகம் நடைபெறுகிறது. இது தொடர்பான விழாவில் ரியல்மி நிறுவனம் 300W சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை 828 ஃபேன் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. சீனாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வைத்து ரியல்மி பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் தான் ரியல்மியின் புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் அறிவிக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் முன்பே, புதிய தொழில்நுட்பம் குறித்த வீடியோ லீக் ஆகிவிட்டது. அதில் புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யும் என்ற தகவல் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர புதிய அம்சத்தை ரியல்மி துணை தலைவர் சேஸ் சு டீசராக வெளியிட்டுள்ளார். ரியல்மி நிறுவனம் ஏற்கனவே 240W சார்ஜிங் தொழில்நுட்பத்தை தனது ரியல்மி GT நியோ 5 மற்றும் ரியல்மி GT5 மாடல்களில் வழங்கி இருக்கிறது.
இந்த வரிசையில், ரியல்மியின் புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பயனர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவில் ஸ்மார்ட்போன் 0 முதல் 17 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 35 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. இதை வைத்து பார்க்கும் போது இந்த தொழில்நுட்பம் நிச்சயம் 300W-ஐ விட அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரியல்மி துணை தலைவர் வெளியிட்ட தகவல்களில் இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் பேட்டரியை 41 நொடிகளில் 20 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரியல்மி அறிவிக்க இருக்கும் புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனை மூன்றே நிமிடங்களுக்குள் 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும். ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது என்று தெரிகிறது.