tech news
ரியல்மி 320W மான்ஸ்டர்.. 4.30 Mins-ல் ஃபுல் சார்ஜ் ஆகிடும்
ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மியின் வருடாந்திர 828 ஃபேன் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் வைத்து புதிய சார்ஜிங் தொழில்நுட்பம் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சீனாவில் நடைபெற்றது. புதிய தொழில்நுட்பம் உலகின் அதிவேக சார்ஜிங் வசதியை உறுதிப்படுத்தி இருக்கிறது.
புதிய 320W சார்ஜிங் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை 4 நிமிடம் 30 நொடிகளில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும் என்று ரியல்மி அறிவித்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை ரியல்மி நிறுவனம் சூப்பர்சோனிக் சார்ஜ் என்று அழைக்கிறது. சார்ஜ் ஏற்றிய ஒரு நிமிடத்திற்குள் இது ஸ்மார்ட்போனை 26 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும். மேலும் இரண்டு நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
பாக்கெட் கேனான் என்று அழைக்கப்படும் ரியல்மி 320W சார்ஜரில் இரண்டு யுஎஸ்பி சி போர்ட்கள் உள்ளன. இவை இரண்டும் ஒரே சமயத்தில் அதிவேக சார்ஜிங் வசதியை வழங்கும். ரியல்மி ஸ்மார்ட்போன்களில் இந்த சார்ஜர் 150W மற்றும் லேப்டாப்களில் 65W வரையிலான திறனை சப்போர்ட் செய்கிறது.
அளவில் புதிய சார்ஜர் ரியல்மி 240W போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், முந்தைய தொழில்நுட்பத்தை விட இது அதிவேக சார்ஜிங்கை உறுதிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் ரியல்மி நிறுவனம் தனது 240W சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிவித்தது. இந்த தொழில்நுட்பம் ரியல்மி GT3 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி 320W சூப்பர்சோனிக் சார்ஜரில் ஏர்கேப் (AirGap) வோல்டேஜ் டிரான்ஸ்ஃபார்மர் உள்ளது. இது சர்கியூட் பிரேக்டவுன் போன்ற விபத்துக்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் வோல்டேஜ் அளவை 20V வரை குறைக்கும். இத்துடன் 98 சதவீதம் வரை சிறப்பான மின் பயன்பாட்டை இந்த சார்ஜர் உறுதிப்படுத்துகிறது.
இதே நிகழ்வில் வைத்து ரியல்மி நிறுவனம் நான்கு தனித்தனி செல்களை ஒன்றிணைத்து 4420mAh மடிக்கப்பட்ட பேட்டரியை அறிமுகம் செய்தது. இவை அனைத்தையும் ஒரே சமயத்தில் சார்ஜ் செய்ய முடியும். குவாட்-செல் ஸ்மார்ட்போன் பேட்டரி என்று அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் டிசைனில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், அதிவேக சார்ஜிங் வசதியை உறுதிப்படுத்துகிறது.