Connect with us

Cricket

கடினமா முயற்சிக்கிறேன்.. ஆனால் இந்திய அணிக்கு எப்போ திரும்புவேன்னு தெரியல.. முகமது ஷமி

Published

on

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட இன்ஸ்டா பதிவுகளில், தனது உடல்நிலை முழுமையாக தயாராகி விட்டது என்று தெளிவுப்படுத்தி இருந்தார். “கையில் பந்துடன், மனம் முழுக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று ஷமி பதிவிட்டார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் களமிறங்கினார் முகமது ஷமி. அதன்பிறகு தசைநார் அழற்சிக்காக காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர், அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் முகமது ஷமி விளையாடவில்லை.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி தற்போது உடல்நிலை தேறியுள்ளாதால், அணிக்கு எப்போது திரும்புவோம் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இந்த சீசனுக்கான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணி மற்றும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. எனினும், இதில் இடம்பெற்ற நான்கு அணிகளிலும் முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை.

துலீப் கோப்பை தொடரில் வீரர்களின் செயல்பாட்டை வைத்து தான் உள்நாட்டில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் வங்காளதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், அதைத் தொடர்ந்து துவங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் உள்ளிட்டவைகளுக்கான இந்திய அணி தேர்வு நடைபெறும். இதில் முகமது ஷமி பெயர் இடம்பெறாததால், அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

இது குறித்து முகமது ஷமி கூறும் போது, “நான் கடினமாக முயற்சி செய்கிறேன், விரைவில் என்னை வங்காள ஜெர்சியிலும், அதன்பிறகு மீண்டும் இந்திய அணி ஜெர்சியில் பார்ப்பீர்கள். வங்காளத்திற்காக இரண்டு-மூன்று போட்டிகளில் விளையாடுவேன், அதன்பிறகு முழுமையாக தயார் ஆன நிலையில் திரும்ப வருவேன்,” என்று தெரிவித்தார்.

google news