latest news
அசத்தலான ரோலபில் டிஸ்ப்ளே அறிமுகம் செய்த சாம்சங்!
சாம்சங் நிறுவனத்தின் புதிய ரோலபில் டிஸ்ப்ளே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டிஸ்ப்ளே அதிநவீன ஸ்கிரீன் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. ரோலபில் ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே (Rollable Flex Display) அதிகபட்சம் ஐந்து மடங்கு நீளமாக ஸ்கிரால் போன்று நீளும் தன்மை கொண்டிருக்கிறது. இந்த ரோலபில் ஸ்கிரீனினை டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் பயன்படுத்த முடியும். முன்னதாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் மோட்டோரோலா நிறுவனம் தனது ரோலபில் கான்செப்ட் போன் மாடலை காட்சிக்கு வைத்திருந்தது.
இதே நிகழ்வில் சாம்சங் நிறுவனம் நான்கு புதிய டிஸ்ப்ளே தொழில்நுட்பங்களை சர்வதேச நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் சாம்சங் ரோலபில் ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே 49 மில்லிமீட்டரில் இருந்து அதிகபட்சம் 254.4 மில்லிமீட்டர் வரை நீளும் வசதி கொண்டுள்ளது. இது அதன் உண்மை அளவை விட ஐந்து மடங்கு வரை அதிகம் ஆகும்.
இந்த டிஸ்ப்ளேவை சுருட்டியும் முடியும். இது தற்போதைய ஸ்லைடிங் மற்றும் மடிக்கக்கூடி டிஸ்ப்ளேக்கள் சந்திக்கும் குறைபாடுகளை மிஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ரோலபில் டிஸ்ப்ளே தவிர சாம்சங் நிறுவனம் முற்றிலும் புது சென்சார் OLED டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஸ்கிரீன் முழுக்க கைரேகைகளை உணரும் திறன் கொண்டிருக்கிறது. பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் மட்டுமின்றி இந்த டிஸ்ப்ளே பயனரின் இதய துடிப்பு, இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற விவரங்களையும் கண்டறிந்து தெரிவிக்கும் வசதி கொண்டிருக்கிறது.
இவ்வாறு செய்ய பயனர்கள் தங்களின் இரு விரல்களை டிஸ்ப்ளே மீது வைத்தாலே போதுமானது. இந்த தொழில்நுட்பம் லைட் சென்சிங் ஆர்கானிக் போட்டோ-டியோடு (OPD) கொண்டு OLED லைட்-ஐ கணக்கிடும். பயனர் தங்களது ரத்த அழுத்த விவரங்களை சரியாக கண்டறிய திரையின் மீது இரண்டு விரல்களை ஒரே சமயத்தில் வைத்தாலே போதும். தற்போது இருக்கும் அணியக்கூடிய சாதனங்களை விட சென்சார் OLED தொழில்நுட்பம் உடல் ஆரோக்கிய விவரங்களை துல்லியமாக கண்டறியும் என்று சாம்சங் தெரிவித்து உள்ளது.