Cricket
அவங்களை உள்ளூர் கிரிக்கெட் விளையாட வைக்க முடியாது.. ஜெய் ஷா
2024-25 ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட்டின் உள்ளூர் போட்டிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த சீசனின் துலீப் கோப்பை தொடர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் பலர் விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் துலீப் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் விளையாட உள்ளனர். இந்த தொடர் செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் விளையாடும் நான்கு அணிகளுக்கு சுப்மன் கில், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். துலீப் கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெறாதது தொடர்பான கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில் அளித்துள்ளார். அப்போது காயம் காரணமாக விலகிய வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட்டில் உடற்தகுதியை நிரூபித்து தான் மீண்டும் அணியில் இடம்பிடிக்க முடியும் என்று தெரிவித்தார்.
“நாங்கள் கொஞ்சம் கடுமையாக இருந்து வருகிறோம். ரவிந்திர ஜடேஜா காயமுற்ற போது, நான் தான் அவரிடம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வலியுறுத்தினேன். தற்போது காயம் காரணமாக யார் வெளியேறினாலும், அவர்கள் அணியில் மீண்டும் இடம்பிடிக்க உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். ஆனால், இதற்காக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட கட்டாயப்படுத்த முடியாது.”
“அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினால், காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை எடுத்துக் கொண்டால், அங்குள்ள முக்கிய வீரர்கள் யாரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதே இல்லை. நாமும், நம் வீரர்களை மரியாதையாக நடத்த வேண்டும். அவர்களை வேலையாட்களாக நடத்த முடியாது. துலீப் கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால் ரோகித், விராட் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் விளையாட போகிறார்கள்,” என்று ஜெய் ஷா தெரிவித்தார்.