Connect with us

Cricket

முந்தைய வருஷத்தோட 116% அதிகம்.. ஐபிஎல் 2023-ல ₹5000 கோடி சம்பாதித்த பிசிசிஐ!

Published

on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) கடந்த ஆண்டு நடைபெற்ற 2023 ஐபிஎல் தொடரில் இருந்து ரூ. 5120 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடரில் ஈட்டியதை விட 116 சதவீதம் அதிகம் ஆகும். 2022 ஐபிஎல் தொடரில் இருந்து பிசிசிஐ ரூ. 2,367 கோடி வருவாய் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2023-இல் இருந்து கிடைத்த மொத்த வருமானம் வருடாந்திர அடிப்படையில் 78 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும், இதே காலக்கட்டத்தில் செலவீனங்கள் 66 சதவீதம் உயர்ந்து ரூ. 6,648 கோடியாக அதிகரித்துள்ளது. பிசிசிஐ வருமானம் பற்றிய தகவல்கள் அதன் 2022-23 ஆண்டு அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஊடக உரிமம் மற்றும் ஸ்பான்ஸர் ஒப்பந்தங்கள் தான் வருவாய் அதிகரிக்க முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

2023 ஐபிஎல் தொடரில் இருந்து துவங்கிய புதிய ஊடக உரிம ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 48,390 கோடி ஆகும். இது 2023 முதல் 2027 வரையிலான காலக்கட்டத்தில் ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டு டிஸ்னி ஸ்டார் குழுமம் 2023 முதல் 2027 வரையிலான ஐபிஎல் தொலைகாட்சி உரிமத்தை ரூ. 23,575 கோடி கொடுத்து வாங்கியது.

இதே காலக்கட்டத்திற்கான டிஜிட்டல் உரிமத்தை ஜியோசினிமா நிறுவனம் ரூ. 23,758 கோடிக்கு வாங்கியுள்ளது. இதே போன்று ஐபிஎல் டைட்டில் உரிமத்தை பிசிசிஐ டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகள் காலக்கட்டத்திற்கு ரூ. 2,500 கோடிக்கு விற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து இணை ஸ்பான்ஸர்ஷிப்களை மைசர்கிள்11, ரூபே, ஏஞ்சல்ஒன் மற்றும் சியட் உள்ளிட்ட பிரான்டுகளுக்கு விற்பனை செய்து ரூ. 1,485 கோடியை பிசிசிஐ வருமானமாக ஈட்டியுள்ளது. ஊடக உரிமத்துக்கான வருவாய் மட்டும் ஐபிஎல் 2022 ஆண்டு ரூ. 3,780 கோடியில் இருந்து 2023 ஐபிஎல் தொடருக்கு ரூ. 8,744 கோடியாக அதிகரித்துள்ளது. இது 131 சதவீதம் அதிகம் ஆகும்.

இத்துடன் ஐபிஎல் அணிகளுக்கான கட்டணம் 22 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ. 1730 கோடியில் இருந்து தற்போது ரூ. 2,117 கோடியாக அதிகரித்துள்ளது. ஸ்பான்சர்ஷிப் வருவாய் 2 சதவீதம் அதிகரித்து ரூ. 828 கோடியில் இருந்து ரூ. 847 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

google news