Cricket
ஓய்வு அறிவித்த ஷிகர் தவான்.. Fans-க்கு சொன்ன மெசேஞ்ச் இதுதான்..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் ஷிகர் தவான், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்திய அணி ஜெர்சியை அணியாமல் இருந்த ஷிகர் தவான், தற்போது ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
38 வயதான ஷிகர் தவான் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக முதல் முறையாக களமிறங்கினார். இதே போன்று இந்திய அணிக்காக ஷிகர் தவான் விளையாடிய கடைசி போட்டியும் ஒருநாள் போட்டியாகவே அமைந்தது. இந்த போட்டி 2022 ஆம் ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிராக நடைபெற்றது.
“கிரிக்கெட்டில் எனது பயணத்தை முடித்துக் கொள்ளும் தருவாயில், எண்ணற்ற நினைவுகள் மற்றும் நன்றிகளை மட்டுமே நான் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, ஜெய் ஹிந்த்,” என்று ஷிகர் தவான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இத்துடன் அவர் ஓய்வு பற்றிய அறிவிப்பை வீடியோ மூலம் தெரிவித்தார்.
அதில், “என் வாழ்க்கையில் அடுத்த பக்கத்தை திறப்பது மிகமுக்கியமானது, இதனால் தான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நான் அறிவிக்கிறேன். கிரிக்கெட் பயணத்திற்கு விடை கொடுக்கும் தருவாயில், நீண்ட காலம் விளையாடியதை நினைத்து என் மனம் அமைதி கொள்கிறது. நான் தற்போது நிற்கும் இடத்தில் இருந்து திரும்பி பார்த்தால், நினைவுகள் மட்டுமே தெரிகிறது. எதிர்காலத்தை பார்க்கும் போது, என்னால் புதிய உலகத்தை பார்க்க முடிகிறது.”
“டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பு, பிசிசிஐ மற்றும் என் ரசகிர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இதனால் எனக்கு நானே கூறிக் கொள்வது இதுமட்டும் தான், இந்தியாவுக்காக இனி விளையாட முடியாது என கவலை கொள்ளாதே, நாட்டுக்காக விளையாடியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொள். என்னை பொருத்தவரை மிகப்பெரிய விஷயம், நான் விளையாடினேன் என்பது மட்டும்தான்.”
“எனக்கு இருந்த ஒரே குறிக்கோள், இந்தியாவுக்காக நான் விளையாட வேண்டும் என்பது மட்டும்தான். அந்த இலக்கை நான் அடைந்துவிட்டேன். அனைவருக்கும் நன்றிகள். முதற்கட்டமாக என் குடும்பத்தார், என் சிறுவயது பயிற்சியாளர் தரக் சின்ஹா மற்றும் மதன் ஷர்மா. அவர்களது வழிகாட்டுதலில் தான் நான் கிரிக்கெட் கற்றுக் கொண்டேன். பிறகு என் ஒட்டுமொத்த அணியினர் அனைவருக்கும் நன்றி. அவர்களுடன் தான் நான் நீண்ட காலம் விளையாடினேன், இது எனக்கு மற்றொரு குடும்பம் ஆகும். இதுவே எனக்கு புகழ் மற்றும் எல்லோரின் நன்மதிப்பு மற்றும் ஆதரவை எனக்கு பெற்றிக் கொடுத்தது,” என்று பேசியுள்ளார்.