Cricket
பாக்.-க்கு எதிராக டெஸ்டில் முதல் வெற்றி – வரலாறு படைத்த வங்கதேசம்..!
பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி முதல் டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்து அசத்தியது. அந்நாட்டில் நிலவும் அரசியல் அசாதாரண சூழலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி துவக்கம் முதலே சிறப்பாக ஆடியது. இதன் பலனாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேசம் அணி முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் 12 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. இந்த வரிசையில் தான் இரு அணிகள் இடையில் ரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கியது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசம் அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் எதிரணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையே 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் முழுமையாக கைப்பற்றியது.
இரு அணிகள் இடையே கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் 25, 2024 ஆம் தேதி தான் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
போட்டியை பொருத்தவரை டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. போட்டியின் முதல் நாள் மழை குறுக்கீடு காரணமாக போட்டி சில முறை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பிறகு இரண்டாம் நாளில் சுதாரித்துக் கொண்ட பாகிஸ்தான் அணி நிதானமாக ஆடி ரன்களை குவித்தது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 448 ரன்களை குவித்து டிக்ளேர் செய்த நிலையில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 565 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய போது 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் காரணமாக வங்கதேசம் அணி 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. வங்கதேசம் அணிக்கு ஜாகிர் ஹாசன் ணற்றும் ஷத்மன் இஸ்லாம் களமிறங்கினர். இவர்கள் முறையே 15 மற்றும் 9 ரன்களை எடுக்க வங்கதேசம் அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.