tech news
வின்க் மியூசிக் சேவைக்கு Good Bye சொன்ன ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் தனது சொந்த மியூசிக் ஸ்டிரீமிங் சேவையான “வின்க் மியூசிக்”-ஐ நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு வின்க் மியூசிக் சேவை துவங்கப்பட்ட நிலையில், தற்போது பத்து ஆண்டுகள் கழித்து இந்த சேவையை நிறுத்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்றாக விளங்கிய வின்க் மியூசிக் 2019 ஆம் ஆண்டு 100 மில்லியன் டவுன்லோட்கள் எனும் சாதனையை படைத்தது. இதன் தொடர்ச்சியாக ஏர்டெல் நிறுவனம் வின்க் ஸ்டூடியோ சேவையை 2022 ஆம் ஆண்டு துவங்கியது. மேலும் கடந்த ஆண்டு முதல் வின்க் மியூசிக் சேவையில் பயனர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி டால்பி அட்மோஸ் தரத்தில் இசையை கேட்டு மகிழும் வசதியை வழங்கி வந்தது.
பயனர்களுக்கு தரமான இசை அனுபவத்தை வின்க் மியூசிக் வழங்கி வந்தது. தற்போது இந்த சேவை நிறுத்தப்படுவதை அடுத்து பிரீமியம் சந்தா வைத்திருப்போர் ஆப்பிள் மியூசிக் சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம். மேலும், இதற்காக பிரத்யேக சலுகைகளும் வழங்கப்படுகிறது. வின்க் மியூசிக் பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் ஏர்டெல் நிறுவனத்தில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் வின்க் மியூசிக் சேவை முழுமையாக நிறுத்தப்படுகிறது. இது தொடர்பான நோட்டிஃபிகேஷன் வின்க் மியூசிக் பிரீமியம் சந்தா வைத்திருப்போருக்கு அனுப்பப்பட உள்ளது. இதோடு ஆப்பிள் மியூசிக் சேவைக்கான பிரத்யேக சலுகை தொடர்பான அறிவிப்புகளும் வழங்கப்பட இருக்கிறது. வின்க் மியூசிக் சேவை நிறுத்தப்படுவதை ஒட்டி இந்த செயலியை பயன்படுத்தி வரும் பிரீமியம் சந்தாதாரர்கள் ஆப்பிள் மியூசிக் சந்தாவுக்கு மாற்றப்படுவர். இது தொடர்பாக ஆப்பிள் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.