Connect with us

tech news

மதர்போர்டு பஞ்சாயத்து.. ஒருவழியா பதிலளித்த ஒன்பிளஸ் – என்ன சொல்றாங்க தெரியுமா?

Published

on

ஸ்மார்ட்போன் சந்தையில் அடிக்கடி ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு வருகிறது ஒன்பிளஸ். எந்த அளவுக்கு வேகமான வளர்ச்சியை பதிவு செய்ததோ, அதற்கு ஏற்ப ஏராமான சிக்கல்களுக்கும் ஒன்பிளஸ் ஆளாகி வருகிறது. இந்தியாவில் ஐபோனுக்கு அடுத்தப்படியாக ஆண்ட்ராய்டு தளத்தில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் பலர், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கியவர்கள் தங்களது ஸ்மார்ட்போன் செயலற்று போனதாக குற்றம்சாட்டினர். இதே போன்று ஒன்பிளஸ் 9 ப்ரோ வாங்கியவர்களும் தங்களது மொபைல் வேலை செய்யாமல் போனதாக தெரிவித்தனர்.

இந்த பிரச்சினையில் ஸ்மார்ட்போன் கோளாறு ஏற்பட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பிரச்சினையை சபரி செய்வதற்கு ரூ. 40,000 வரையிலும் செலவாகும் என்று ஒன்பிளஸ் சர்வீஸ் சென்டர்கள் சார்பில் அதிரடியாக பதில் அளிக்கப்பட்டது. இதனால் குமுறிய ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள், சமூக வலைதளங்களில் ஒன்பிளஸ்-ஐ டேக் செய்து கமென்ட்களில் கிழித்தெடுத்தனர்.

மேலும் பலர் ஒன்பிளஸ் கம்யூனிட்டி தளத்தில் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதற்கு செவி கொடுக்கும் வகையில், ஒன்பிளஸ் சார்பில் ஒருவழியாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் சிலர் அதன் மதர்போர்டு சார்ந்து குறிப்பிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்வதை கேட்க வருத்தமாக இருக்கிறது.”

“எங்களது வாடிக்கையாளர்களின் பயனர் அனுபவம் எங்களுக்கு மிகமுக்கியமான ஒன்று. இந்த விவகாரம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். எனினும், இந்த பிரச்சினையை விரைந்து சரி செய்வதற்கான பணிகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மதர்போர்டு சார்ந்த பிரச்சினைகளை சரி செய்ய அதிக செலவாகும், ஆனாலும் அவற்றை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.”

“இந்த பிரச்சினை மூலம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சர்வீஸ் சென்டர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் பிரச்சினையை விரைந்து சரி செய்ய எங்களுக்கு உதவியாக இருக்கும்,” என தெரிவித்துள்ளது.

google news