tech news
இனி எல்லா மாடல்களிலும் OLED தான்.. ஆப்பிள் திட்டவட்டம்..!
ஆப்பிள் நிறுவனம் தனது 2025 ஐபோன் மாடல்கள் அனைத்திலும் ஆர்கானிக் லைட் எமிட்டிங் டயோட் (OLED) டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானை சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் எல்சிடி டிஸ்ப்ளேக்களுக்கு பதிலாக OLED டிஸ்ப்ளே பயன்படுத்துவது என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தொலைகாட்சி மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் எல்சிடி டிஸ்ப்ளேக்களை தவிர்த்து OLED டிஸ்ப்ளே பயன்படுத்த துவங்கியுள்ளனர். இவை முந்தைய ரக டிஸ்ப்ளேக்களை விட பிரகாசமானவை என்றும், அதிக தரமுள்ள வீடியோக்களை பார்க்க ஏதுவாக இருக்கும்.
தனது புதிய ஐபோன் SE மாடலில் பயன்படுத்துவதற்கான OLED டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் நிறுவனம் சீனாவின் BOE டெக்னாலஜி மற்றும் தென் கொரியாவின் எல்ஜி டிஸ்ப்ளே ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வாங்க துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் X மாடலில் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக OLED டிஸ்ப்ளே வழங்கி இருந்தது. எனினும், தற்போது வரை பிரீமியம் பிரிவில் விற்பனை செய்யப்படும் ஐபோன் மாடல்களில் மட்டுமே OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலை அடுத்த ஆண்டு துவங்கி அடியோடு மாறிவிடும் என்று தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது அதிநவீன ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED டிஸ்ப்ளே வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுவித டிஸ்ப்ளே பயன்படுத்துவது குறித்து ஆப்பிள் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இதே போன்று சீனாவை சேர்ந்த BOE மற்றும் தென் கொரியாவின் எல்ஜி டிஸ்ப்ளே சார்பிலும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.