tech news
கொஞ்ச நாள் தான் இருக்கு.. ஆதார் கார்டை இலவசமா அப்டேட் செய்வது எப்படி?
இந்தியாவில் ஆதார் கார்டு தற்போது அனைவரின் அடையாள அட்டையாக மாறி வருகிறது. நாட்டிற்குள் எந்த சேவையை பெறுவதானாலும், ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் பல்வேறு காரணங்களால் மொபைல் எண், வீட்டு முகவரி, புகைப்படம் என அதன் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம்.
இதனை கருத்தில் கொண்டு ஆதார் சேவை மையம் பயனர்களுக்கு ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக பயனர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களுக்கு சென்று தங்களது விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆதார் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?
இந்தியாவில் குடிமக்கள் தங்களது ஆதார் விவரங்களை UIDAI வலைதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/) அப்டேட் செய்யலாம். வலைதளத்தில் பயனர்கள் தங்களின் ஆதார் எண் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட்டு அப்டேட் செய்ய துவங்கலாம்.
- முதலில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணைய முகவரியில் ஆதார் அதிகாரப்பூர்வ வலைதளம் செல்ல வேண்டும்.
- இனி 12 இலக்க ஆதார் எண் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இதற்கு உங்ளது பதியப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட வேண்டும்.
- ஆதார் வலைதளத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
- ஏதேனும் விவரங்களை அப்டேட் செய்ய விரும்பினால், அதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இதைத் தொடர்ந்து மாற்றம் கோரும் விவரங்களை உறுதிப்படுத்த அதன் அசல் தரவை புகைப்படம் எடுத்து அதனை- JPEG, PNG, அல்லது PDF வடிவில் 2 MB அளவுக்குள் இருக்கும் வகையில் மாற்றி அப்லோடு செய்ய வேண்டும்.
- இனி அப்டேட் செய்ய கோரிக்கை விடுக்கலாம்.
- இவ்வாறு செய்ததும் உங்களது கோரிக்கை ஏற்கப்பட்டதை கூறும் வகையில் சர்வீஸ் ரிக்வெஸ்ட் நம்பர் உங்களுக்கு அனுப்பப்படும். இதை கொண்டு உங்களது கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை டிராக் செய்யலாம்.
பயனர்கள் ஆன்லைனில் இருந்தபடி வீட்டு முகவரி, பயோமெட்ரிக் விவரங்கள், பெயர், மொபைல் நம்பர் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை அதிகாரப்பூர்வ UIDAI அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மேற்கொள்ள முடியும்.
பயனர்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இலவசமாக தங்களது விவரங்களை அப்டேட் செய்ய முடியும். அதன்பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும்.