Cricket
என்னங்க கிரவுண்ட் இது? இனிமே வரவே மாட்டோம்.. நொய்டா மைதானத்தால் கடுப்பான ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் ஒன்-ஆஃப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரேட்டர் நொய்டாவில் உள்ள விஜய் சிங் பதிக் ஸ்போர்ட்ஸ் வளாக மைதானத்தில் நடைபெற இருந்தது. எனினும், இரு அணிகள் இடையிலான இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் தடைப்பட்டது.
மழை காரணமாக நியூசிலாந்து அணி பயிற்சியில் கூட ஈடுபட முடியாத சூழல் உருவானது. ஒருநாள் இரவு முழுக்க மழை கொட்டித்தீர்த்த நிலையில், மறுநாள் போட்டிக்கு மைதானத்தை தயார்படுத்த அங்கு அதிநவீன வசதிகள் ஏதும் இல்லை. இதனால் நேற்று முழுக்க கிட்டத்தட்ட ஆறு முறை களம் விளையாட ஏதுவாக இருக்கிறதா என்று பார்க்க அம்பயர்கள் மற்றும் வீரர்கள் ஆவலுடன் பார்த்தனர்.
எனினும், 30 யார்ட் வட்டத்திற்குள் நிறைய பேட்ச்கள் இருந்ததால், போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. நேற்று மதியம் வெயில் வந்த போதிலும், மைதானத்தில் விளையாடுவதற்கான சூழல் ஏற்படவில்லை. இதன் காரணமாக நேற்று மாலை 4 மணி அளவில் நேற்றைய போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
“இதுமிகவும் மோசமாக இருக்கிறது, நாங்கள் மீண்டும் இங்கு வரவே மாட்டோம். இங்குள்ள வசதிகளால் வீரர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. நாங்கள் இது குறித்து தகுதியானவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். மைதானத்தில் உள்ளவர்கள் எங்களுக்கு உத்தரவாதம் அளித்தனர்,” என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்றிரவும் மழை பெய்ததால், இன்றைய போட்டி துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை வேளை வரையில் இந்த போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை. மைதான ஊழியர்கள் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.