latest news
யுபிஐ பேமெண்ட் உச்சவரம்பு அதிகரிப்பு.. எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
இந்தியாவில் வரி செலுத்துவோர் யூனிஃபைடு பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தால் பயனடைவர். தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) வரி செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனை உச்ச வரம்பை உயர்த்தியுள்ளது. அதன்படி ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24, 2024 தேதியிட்ட தேசிய பேமென்ட் கார்ப்பரேஷனின் சுற்றறிக்கையின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சுற்றறிக்கையில், கட்டணம் செலுத்தும் முறையாக யுபிஐ பயன்பாடு அதிகரித்து வருவதால், குறிப்பிட்ட வகை கட்டண முறைகளில் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு இடமளிக்க வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சுற்றறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்:
பரிவர்த்தனை வரம்பு அதிகரிப்பு: யுபிஐ பேமெண்ட்களில் பரிவர்த்தனைக்கு ரூ. 5 லட்சம் வரை வரி செலுத்த முடியும்.
தகுதியான பிற பரிவர்த்தனைகள்: மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐபிஓ-க்கள் மற்றும் ஆர்பிஐ சில்லறை நேரடித் திட்டங்களுக்கான கட்டணங்களுக்கும் இந்த உயர் வரம்பு பொருந்தும்.
நடைமுறைப்படுத்தல்: புதிய வரம்பு செப்டம்பர் 16, 2024 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இருப்பினும், தனிப்பட்ட வங்கிகளுக்கு குறிப்பிட்ட பரிவர்த்தனை வரம்புகள் இருப்பதால், இந்த அதிகரிக்கப்பட்ட வரம்பை ஆதரிக்கிறதா என்பதை பயனர்கள் தங்கள் வங்கிகள் மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த நடவடிக்கையானது வரி செலுத்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதையும், பெரிய பரிவர்த்தனைகளுக்கும் யுபிஐ முறை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.
புதிய வரம்பை பயன்படுத்த விரும்புவோர், அவரவர் பயன்படுத்தும் வங்கிகள் மற்றும் யுபிஐ செயலிகள் புதிய வரம்பை அனுமதிக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் வசதி மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனின் முயற்சியின் ஒரு பகுதியாகவே தற்போது பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.