Connect with us

Cricket

கவுதம் கம்பீரின் கோபம்.. தினேஷ் கார்த்திக் சொல்வது சரிதான்..

Published

on

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவரது தந்திரமிக்க ஆட்டம் மற்றும் கடுங்கோபம் என இரண்டிற்கும் சம அளவு பெயர் பெற்றவர். இந்திய அணிக்கு துவக்க வீரராக இருந்தது, ஐபிஎல் தொடரில் ஆலோசகராக இருந்தது என எந்த சூழலிலும் தனக்கு தவறு என தெரிந்தவற்றுக்கு கவுதம் கம்பீர் கோபத்தை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்கியதே இல்லை.

கவுதம் கம்பீரின் கோபம் உலக கிரிக்கெட்டில் பலருக்கும் பழகிப் போன விஷயம் தான். போட்டிகளின் போது வீரர்கள் கோபம் கொள்வது சமீபத்திய காலங்களில் சகஜமாக மாறி வருகிறது. கிரிக்கெட் மட்டுமின்றி விளையாட்டுத் துறையில் வீரர்கள் கோபத்தை வெளிப்படுத்துவது ரசிகர்களுக்கும் பழகிவிட்டது. இந்த நிலையில், கவுதம் கம்பீர் கோபம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

“அவரது (கம்பீர்) கோபம் எப்போதும் வீரர்களை பாதுகாக்கவே வெளிப்படும். இதனை மற்ற வீரர்கள் அனைவருமே விரும்புவர். கோபம் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கோபம் கொள்ள மாட்டார். தேவையான இடத்தில் கோபத்தை வெளிப்படுத்துவது, வார்த்தைகளை மிக கவனமாக பயன்படுத்துவது கம்பீரின் பாணி. இவ்வாறு செய்வது அவர் வீரர்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வர முடியும்.”

“ஏராளமான டி20 தொடர்களில் அவர் பங்கேற்றுள்ளார். ஆனால் இந்த டெஸ்ட் தொடர், ஒரு பயிற்சியாளராக அவருக்கு மிகவும் புதிதாக இருக்கும். அது அவரின் பின் மூளையில் விளையாடிக் கொண்டிருக்கும். கடினமான சூழல்களில் பல முறை வெற்றிகரமாக கடந்து வந்தவர்களில் ஒருவர் கம்பீர். போட்டியின் நாடியை புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர். ஒரு பயிற்சியாளராக இப்படி இருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.”

“பயிற்சியாளராக அவர் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறார். அந்த வகையில், அவர் எப்படி திட்டமிடுகிறார் என்பதை பார்க்க விறுவிறுப்பாக இருக்கும். அவர் அனைத்து தரப்பிலும் பங்காற்றக்கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுவரை அவரது இந்த பாணி மிகவும் சிறப்பாக பங்காற்றி இருக்கிறது,” என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

google news