Cricket
320 பந்துகளில் 498 ரன்கள்.. மிரட்டி விட்ட மாணவர்.. யார் இந்த துரோனா தேசாய்?
18 வயதான இளம் கிரிக்கெட் வீரர் துரோனா தேசாய். பள்ளி அளவில் நடைபெற்ற திவான் பல்லுபாய் கோப்பை கிரிக்கெட்டில் தனது பள்ளி அணிக்காக 498 ரன்களை விளாசியுள்ளார். செயின்ட் சேவியர்ஸ் அணிக்காக விளையாடிய தேசாய் ஜெ.எல். இங்லிஷ் பள்ளிக்கு எதிராக ஷிவே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தான் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவரது நேற்றைய ஆட்டம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இணைய செய்துள்ளது. 320 பந்துகளை எதிர்கொண்ட தேசாய் ஏழு சிக்சர்கள் மற்றும் 86 பவுண்டரிகளுடன் எதிரணியை திணறடித்து 498 ரன்களை விளாசியுள்ளார். இவரின் அதிரடி ஆட்டம் செயின்ட் சேவியர்ஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 712 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக அமைந்தது.
கிட்டத்தட்ட 500 ரன்களை அடிக்க இருந்த நேரத்தில் விக்கெட்டை பறிக்கொடுத்தது பற்றி பேசிய தேசாய், “நான் 500 ரன்களை நெருங்கியிருந்தேன் என்றே எனக்கு தெரியாது. ஸ்கோர்போர்டும் இல்லை, எனது அணியினரும் என்னிடம் அதுபற்றி எதுவும் கூறவில்லை. நான் எனது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன், ஆனால் இத்தனை ரன்களை அடித்ததில் எனக்கு மகிழ்ச்சி தான்,” என்றார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த துரோனா தேசாய் தனது மாநிலத்திற்காக அண்டர் 14 அணியில் விளையாடி இருக்கிறார். இவரது சமீபத்திய ஆட்டம், குஜராத் அண்டர் 19 அணியில் இவரது பெயரை இடம்பெற செய்ய தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏழு வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வரும் தேசாய், சச்சின் டெண்டுல்கர் பேட் செய்வதை பார்த்து கிரிக்கெட்டில் ஈர்க்கப்பட்டுள்ளார்.
இளம் வயதில் தனது கிரிக்கெட் ஆர்வத்தை கண்டுபிடித்த தேசாயின் தந்தை அவருக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வந்துள்ளார். மேலும், தேசாய் கிரிக்கெட்டில் வெற்றி பெற பயிற்சியாளர் ஜெயபிரகாஷ் பட்டேலிடம் தேசாய் பயிற்சி பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 40 கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெயபிரகாஷ் பட்டேல் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்திய அளவில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் பிரணாவ் தான்வாட் (1009*) மற்றும் இந்திய வீரர் பிரித்வி ஷா (546) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் துரோனா தேசாய் இடம்பெற்றுள்ளார்.