Cricket
INDvsBAN 2வது டெஸ்ட்: கான்பூரில் பாதுகாப்பு குளறுபடி, UPCA கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் சி ஸ்டாண்டு பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை காண தகுதியில்லாத சூழலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
பாதுகாப்பு குறைபாடு பற்றிய தகவல்கள் வேகமாக பரவ ஆரம்பித்த நிலையில், உத்தர பிரதேச கிரிக்கெட் வாரியம், கிரீன் பார்க் மைதானத்தின் பாதுகாப்பு குறித்து வெளியாகி வரும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரிவித்து இருக்கிறது.
ரசிகர்கள் பாதுகாப்பு விஷயத்தில் சந்தேகம் எழுந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் பொதுப் பணி துறை மற்றும் கான்பூர் ஹார்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த வல்லுநர்கள் மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் படி சி ஸ்டாண்டில் உள்ள மொத்த இருக்கைகளில் கிட்டத்தட்ட 2800 இருக்கைகளை காலியாக வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்டாண்டில் மொத்தம் 10,000 இருக்கைகள் உள்ள நிலையில், வெறும் 7,200 இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதே மைதானத்தில் நடைபெற்ற முந்தைய போட்டியை விட, தற்போது கிட்டத்தட்ட 6,000 இருக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் பாதுகாப்பு விஷயத்தில் தேவையான அனுத்து வகை முன்னேற்பாடுகளையும் உத்தர பிரதேச கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது.