latest news
புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியீர் பகுதியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. கிள்ளியூரை சுற்றியுள்ள கிராமங்களில் 1144 ஏக்கர் பரப்பளவில் இந்த சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த சுரங்கம் அமைக்கப்பட்டால் புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார. கிள்ளியூர் மற்றும் அதினை சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் அணுக்கதிர்வீச்சு நிலவும் பகுதிகள் ஆகும்.
மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் ஏறபடும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள் மக்கள் புற்று நோய், சிறு நீரகப் பாதிப்பு, தோல் நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அன்மைக் காலங்களில் இந்த வகை பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார் அன்புமணி
இந்த பகுதிகளில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கும். அணுக்கதிர் வீச்சு தொடர்பான தீய விளைவுகளும் ஏற்படும். தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.