Cricket
ஐபிஎல் 2025: RCB ஜெயிக்க இதை செய்யனும்!
ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஐபிஎல் 2025 குறித்த ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட 2025 ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தக்கவைக்கும் விதிகள் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
தற்போது ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இதனால், ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்வது என்ற ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது குறித்த இறுதி முடிவு அடங்கிய விவரங்களை ஐபிஎல் அணிகள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், ஆர்சிபி அணி அடுத்த ஆண்டு கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஆர்சிபி அணி எதையாவது செய்து ரோகித் சர்மா தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ரோகித் சர்மாவை பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சம்மதிக்க செய்ய வேண்டும்.”
“ரோகித் சர்மாவுக்கு ஆடும் லெவனை எப்படி செட் செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். அவரை அணியில் சேர்த்துக் கொண்டால் அந்த அணியின் நீண்ட கால கோப்பையை வெல்லும் கனவை நிறைவேற்றிக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.”
இதுதவிர, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்த பேசும் போது, “ரோகித் சர்மா கேப்டனாக மட்டுமே விளையாட வேண்டும். அவர் மிகப்பெரிய வீரர், அவர் சமீபத்தில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல காரணமாக விளங்கினார். அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்க நிறைய ஆஃபர்கள் இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.”
“நிறைய பேர் கேப்டன் பொறுப்புடன் அவருக்கு அழைப்பு விடுப்பார்கள். ஆனால், என்னை பொருத்தவரை அவர் எந்த அணிக்கு சென்றாலும், கேப்டன் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி விட வேண்டும். அவர் இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார். அதனை அவர் கேப்டனாகவே கழிக்க வேண்டும். களத்தில் அவரைப் போன்று கேப்டன்சி செய்பவர்கள் மிகவும் குறைவு,” என்று முகமது கைஃப் தெரிவித்தார்.