Cricket
டெஸ்ட் போட்டியில் டி20 மோட்.. இந்தியா படைத்த சாதனைகள்.. முழு லிஸ்ட்..!
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்து அசத்தியது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதலாது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.
இந்த போட்டியின் 2 மற்றும் 3-ம் நாள் ஆட்டங்கள் மழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து நேற்று நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த வகையில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்த வங்கேதேசம் அணி 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய ரோகித் சர்மா முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார்.
மேலும், இந்திய வீரர்கள் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 38.4 ஓவர்களில் 285 ரன்களை குவித்தது. இந்த இன்னிங்ஸில் மட்டும் இந்திய அணி ஐந்து உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது.
- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிவேக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்கள் என்ற சாதனையை நேற்றைய ஆட்டத்தின் ஒற்றை இன்னிங்ஸில் இந்திய அணி படைத்தது.
- டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வீரர் ஒருவர், தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய நான்காவது வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை அடித்த நான்காவது வீரராக விராட் கோலி உள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா ஆகியோர் 27,000 ரன்களை அடித்துள்ளனர்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்.
- 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 96 சிக்சர்களை அடித்துள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.