Cricket
92 ஆண்டுகளில் முதல் இந்திய வீரர்.. ஜெய்ஸ்வாலின் சூப்பர் சாதனை..!
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய வீரர்களில் ஒருவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இளம் இந்திய வீரரான ஜெய்ஸ்வால் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸில் மூன்று அரைசதங்களை விளாசியுள்ளார்.
அதுவும், மழை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி பாதிக்கும் சூழல் உருவான நேரத்தில், இந்திய அணிக்கு தேவையான ரன்களை அதிரடியாக அடித்து அசத்தினார். மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெற்றி இலக்கை துரத்தும் வேளையில், அற்புதமாக அரைசதம் கடந்து வெற்றியை உறுதிப்படுத்தினார். போட்டியில் தனது அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கச் செய்யும் வகையில் ஆடியதோடு, குறிப்பிடத்தக்க சாதனைகளை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசிய முதல் இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
- உள்நாட்டு போட்டிகளில் இந்திய வீரர் ஒரே ஆண்டில் அதிகபட்ச அரைசதங்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் ஜெய்ஸ்வால் எட்டு அரைசதங்களை விளாசியுள்ளார். முன்னதாக குண்டப்பா விஸ்வநாத் (1979), விரேந்திர சேவாக் (2010), சத்தேஷ்வர் புஜாரா (2016), கே.எல். ராகுல் (2017) ஆகியோர் ஒரே ஆண்டில் அதிகபட்சம் ஏழு அரைசதங்களை விளாசியுள்ளனர்.
- இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், ஜெய்ஸ்வால் பென் ஸ்டோக்ஸ் சாதனையை முறியடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரே எடிஷனில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடம் பிடித்துள்ளார். நடப்பு 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜெய்ஸ்வால் இதுவரை 32 சிக்சர்களை விளாசியுள்ளார்.
- முன்னதாக 2019-21 தொடரில் பென் ஸ்டோக்ஸ் 31 சிக்சர்களை அடித்தது, சாதனையாக இருந்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் ஒரு சீசனில் 30-க்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்த இரண்டு வீரர்கள் பட்டியலில் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெய்ஸ்வால் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.