Cricket
293 டெஸ்ட் போட்டிகளில் 24 முறை தான்.. புது வரலாறு படைத்த இந்தியா-வங்கதேசம்
கான்பூரில் நடைபெற்ற இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி உள்நாட்டில் நடைபெற்ற 18 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. கடைசியாக எம்.எஸ். டோனி தலைமையிலான இந்திய அணி 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றது. அதன்பிறகு இந்திய அணி விளையாடிய டெஸ்ட் தொடர்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் டாஸ் வென்ற அணி அனைத்து போட்டிகளிலும் பந்துவீச்சை தேர்வு செய்தது இதுவே முதல் முறை ஆகும். இந்தியாவில் விளையாடப்பட்ட 293 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 24 போட்டிகளில் தான் ஒரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த 1933 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்தியா வங்கதேசம் தொடரின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் உள்ளது. அதாவது இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அணிகள் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்த சம்பவங்கள் எதுவும் இந்த மைதானங்களில் நடைபெறவில்லை. முன்னதாக கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் (6), மும்பை வான்கடே மைதானம் (5) மற்றும் மொகாலியில் உள்ள பிசிஏ மைதானம் (5) மைதனங்களில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளன.
சமீபத்திய டெஸ்ட் போட்டிகள் எதுவும் இந்த மூன்று மைதானங்களில் நடைபெறவில்லை. மேலும், இந்தத் தொடர் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் மற்றும் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானங்களில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்து, போட்டியிலும் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை ஆகும்.