Cricket
ரவுண்டு கட்டி ஆடிய அஷ்வின்.. முத்தையா முரளிதரனின் நீண்ட கால சாதனையை சமன் செய்து அசத்தல்
ரவிச்சந்திரன் அஷ்வின் சமீபத்திய இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியது அவருக்கு பல சாதனைகளை பெற்றுக் கொடுத்ததோடு, இந்திய அணியும் தொடரை முழுமையாக கைப்பற்றவும் துணையாக இருந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிய போது சதம் விளாசியது, பந்துவீச்சில் கணிசமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதை யாரும் மறக்க முடியாது.
சென்னை மற்றும் கான்பூர் டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் விளையாடிய விதம் அவர் பல சாதனைகளை படைக்கவும், சில சாதனைகளை தகர்க்கவும் செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் செய்த சம்பவத்தை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
பந்துவீச்சில் இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் படடியலில் அஷ்வின் மற்றும் பும்ரா முதலிடம் பிடித்தனர். இருவரும் இந்த தொடரில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற அஷ்வின், முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்தத் தொடர் நாயகன் விருதை சேர்த்து அஷ்வின் இதுவரை 11 தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இலங்கை அணியின் ஜாம்பவான் வீரராக திகழ்ந்த முத்தையா முரளிதரனும் 11 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் 11 முறை வென்று முதலிடத்தில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஜாக்ஸ் காலிஸ் 9 முறை, இம்ரான் கான் 8 முறை, ரிச்சர்ட் ஹாட்லி 8 முறையும், ஷேன் வார்னே 8 முறையும் தொடர் நாயகன் விருது வென்றுள்ளனர்.
தொடர் நாயகன் விருது மட்டுமின்றி, இந்தத் தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25-இல் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 53 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஜோஷ் ஹாசில்வுட் 51 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடம்பிடித்துள்ளார்.