Cricket
நிதானமாக ஆடிய ஷர்துல்.. அவுட் ஆனதும் மருத்துமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?
மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் வீரரான ஷர்துல் தாக்குர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரானி கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருந்த ஷர்துல் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷர்துல் தாக்குர் ஒன்பதாவது விக்கெட்டில் தனது அணிக்காக 36 ரன்களை அடித்தார். களத்தில் இருந்த போது 102 டிகிரி காய்ச்சலுடன் கிரீஸில் பேட்டிங் செய்து வந்துள்ளார். இரானி கோப்பை போட்டியின் முதல் நாளிலேயே ஷர்துல் தாக்கூர் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.
முதல் நாளில் லேசான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பேட் செய்ததால், காய்ச்சல் அதிகரித்து உடல்நிலை மோசமானது. இதனால் போட்டியின் இடையில் இருமுறை அணியின் மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்தார்.
உடல் நிலை மோசமடைந்த போதிலும், மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்த ஷர்துல் தாக்குரை, அணி நிர்வாகம் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. நேற்றிரவு முழுக்க மருத்துவமனையில் இருந்த ஷர்துல், மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாடுவது அவரது உடல்நிலை தேறுவதை பொருத்து முடிவு செய்யப்பட உள்ளது.
ஷர்துல் தாக்குருக்கு மலேரியா மற்றும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா என்ற ரீதியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தனது அணிக்காக மிகவும் கவனமாக விளையாடிய ஷர்துல் தாக்குர் 59 பந்துகளில் ஒரு சிக்சர், நான்கு பவுண்டரிகளை விளாசினார்.
தன்னுடன் ஆடிய சர்பராஸ் கான் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதால், ஷர்துல் தாக்குர் தனது ஷாட்களை மிக கவனமாக தேர்வு செய்து அடித்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சர்பராஸ் கான் 221 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.