Cricket
INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி குவாலியரில் வருகிற 6 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டி நடத்துவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. வங்கதேசம் நாட்டில் இந்துக்களுக்கு எதிரான அத்துமீறலை கண்டித்து வலது சாரி அமைப்புகள் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்கள் தங்கியுள்ள தங்கும் விடுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
மேலும் போட்டி நாளன்று பாதுகாப்பு அதிகாரிகள் மதியம் 2 மணி முதல் பாதுகாப்பு பணிகளை துவங்கவுள்ளனர். இவர்கள் அன்றிரவு ரசிகர்கள் வீட்டுக்கு செல்லும் வரை பாதுகாப்பு பணியை தொடர இருக்கின்றனர். முன்னதாக போட்டி நடைபெறும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை போராட்டங்கள் மற்றும் மோதலை ஏற்படுத்தும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டு இருந்தார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மாதவ்ராவ் ஸ்கிந்தியா சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி அன்றிரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது.
முன்னதாக இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை, இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியிருந்தது. இதே நிலையை டி20 தொடரிலும் தொடர இந்திய அணி திட்டமிட்டு வருகிறது. இதேபோன்று டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேசம் அணி டி20 தொடரிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பி்ல் களமறங்குகிறது.