Cricket
ரஞ்சி கோப்பை: சூப்பர் ஃபார்மில் சாய் சுதர்சன்.. இரட்டை சதம் அடித்து அசத்தல்
ரஞ்சி கோப்பை 2024-25 சீசனில் தமிழக வீரர் சாய் சுதர்சன் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் தனது அபார ஃபார்மை வெளிப்படுத்தினார்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கிய ரஞ்சி கோப்பை போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. தமிழக அணிக்கு பேட்டிங்கில் துவக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் நாராயன் ஜெகதீசன் களமிறங்கினர். இந்த ஜோடி டெல்லி அணி பந்துவீச்சை திணறடித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 168 ரன்களை எடுத்த நிலையில், ஜெகதீசன் 65 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் நடப்பு ரஞ்சி சீசனில் முதல் சதத்தை பதிவு செய்தார். இது அவரின் ஆறாவது முதல் தர சதம் ஆகும். 23 வயதான சாய் சுதர்சன் தொடர்ந்து தனது ஃபார்மை நிரூபித்து வருகிறார். இவருடன் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சாய்-சுந்தர் ஜோடி 150 ரன்களை சேர்த்தது.
தொடர்ந்து அபாரமாக ஆடி வந்த சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி, ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி 1 விக்கெட் இழப்புக்கு 379 ரன்களை எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 202 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
2021 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் சாய் சுதர்சன் விரைவில் ஐபிஎல் தொடரிலும் களமிறங்கினார். 2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் ஏலத்தில் சாய் சுதர்சனை குஜராத் அணி ரூ. 20 லட்சம் விலையில் எடுத்தது. 2023 ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் தான் விளையாடிய எட்டு போட்டிகளில் 362 ரன்களை விளாசினார்.
மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடிய சாய் சுதர்சன் 527 ரன்களை அடித்து அசத்தினார்.