Connect with us

Cricket

20 ஓவர்களில் 344 ரன்கள்.. மிரட்டிவிட்ட ஜிம்பாப்வே..!

Published

on

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணி புதிய உலக சாதனை படைத்தது. நைரோபியில் உள்ள ரௌராகா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் காம்பியா அணியை எதிர்கொண்ட ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையாக அமைந்தது.

ஆப்பிரிக்கா துணை கண்டங்களை சேர்ந்த அணிகள் விளையாடிய டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில் வைத்து ஜிம்பாப்வே அணி இந்த சாதனையை படைத்தது. முன்னதாக கடந்த ஆண்டு ஹாங்சௌ அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி 20 ஓவர்களில் 314 ரன்களை விளாசி இருந்தது, டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

இந்த சாதனையை தற்போது ஜிம்பாப்வே அணி முறியடித்துள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ராசா 7 பவுண்டரிகள், 15 சிக்சர்களுடன் 43 பந்துகளில் 133 ரன்களை விளாசினார். இவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 33 பந்துகளில் சதம் விளாசிய ராசா, நமீபியா அணியின் ஜான் நிகோலுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் சைப்ரஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் எஸ்டோனியா அணியின் சாஹில் சௌகான் 27 பந்துகளில் சதம் விளாசினார். இதுதவிர கடந்த 2018 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ஆரோன் பின்ச் 172 ரன்களை விளாசினார். இதுவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.

google news