Cricket
ஐ.பி.எல். மெகா ஏலம்.. ரிஷப் பண்ட்-க்கு குறி.. ஸ்கெட்ச் போடும் 3 அணிகள் ..!
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. மெகா ஏலத்தை ஒட்டி ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதனால் மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். இதோடு, அணிகள் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்கள் பட்டியலை இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மெகா ஏலம் தொடர்பான பரபரப்பு துவங்கும் முன்பே, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பல்வேறு மாற்றங்களை செய்ய துவங்கிவிட்டது.
அதன்படி அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக ஹேமங் பதானி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதுதவிர டெல்லி அணியில் இருந்து சவுரவ் கங்குலி விலகினார். இதே போன்று டெல்லி அணியின் கேப்டனாக உள்ள ரிஷப் பண்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரிஷப் பண்ட் விடுவிக்கப்படும் நிலையில், அவரை தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
லக்னோ அணியில் இருந்து கேப்டன் கே.எல். ராகுல் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமிக்க லக்னோ அணி திட்டமிடும் என்று தெரிகிறது. இதுதவிர கடந்த ஐ.பி.எல். 2024 சீசனில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மா அடுத்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியில் இருந்து வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை ரோகித் சர்மா மெகா ஏலத்திற்கு வந்தால், அவரை அணியில் எடுக்க பெரும் தொகை தேவைப்படும். இந்த காரணத்திற்காகவும் ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.