Cricket
காற்றில் பிடிக்கப்பட்ட கேட்ச், என்ன இந்தம்மா இப்படி பறக்குது?
இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ராதா யாதவ் பிடித்த கேட்ச் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதை பார்த்த இந்திய வீராங்கனைகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
32வது ஓவரின் மூன்றாவது பந்தை பிரியா மிஷ்ரா வீச, அதை எதிர்கொண்ட ஹாலிடே அடித்து ஆடினார். எனினும் டைமிங் சரியாக அமையாததால், பந்து 30 யார்டு வட்டத்தை விட்டு சற்றே வெளியே சென்றது. இதை பார்த்து வேகமாக ஓடி வந்த இந்திய ஃபீல்டர் ராதா யாதவ் காற்றில் துள்ளி குதித்து லாவகமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த கேட்ச் சர்வதேச கிரிக்கெட்டில் பிரியா மிஷ்ராவின் முதல் விக்கெட்டாக அமைந்தது.
இந்த கேட்ச் தொடர்பான வீடியோவை பிசிசிஐ மகளிர் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விக்கெட்டை பறிக்கொடுத்த ஹாலிடே, வியப்படைந்த நிலையிலேயே களத்தை விட்டு வெளியேறினார்.
போட்டியை பொருத்தவரை முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை எடுத்தது. இதன்பறகு 260 ரன்களை வெற்றி இலக்காக துரத்திய இந்திய மகளிர் அணி 47.1 ஓவர்களில் 183 ரன்களை மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.