Cricket
5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட் துவங்கப்படும் முன்பில் இருந்து நடைபெற்று வருகிறது. ஐசிசி அங்கீகாரத்தில் நடைபெறும் இந்த தொடர் இரு அணிகள் ஆறு ஓவர் போட்டியில் விளையாடும். இதில் ஒவ்வொரு அணியிலும் ஆறு வீரர்களே இடம்பெறுவர்.
மிகக் குறைந்த ஓவர்கள் என்பதால் வீரர்கள் அதிக ரன்களை விளாச முனைப்பு காட்டுவர். மேலும், விக்கெட் கீப்பர் நிச்சயம் ஒரு ஓவர் பந்துவீசுவது கட்டாயம் ஆகும். ஒரு வீரர் அதிகபட்சம் இரண்டு ஓவர்கள் வரை பந்துவீச முடியும். 2024 ஆண்டிற்கான தொடர் இன்று (நவம்பர் 1) முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் மொத்தம் 12 அணிகள் நான்கு பிரிவுகளின் கீழ் பிரிந்து ஆடும்.
இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ராபின் உத்தப்பா 8 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். இவருடன் களமிறங்கிய பரத் சிப்ளி 16 பந்துகளில் 53 ரன்களை குவித்தார். அடுத்து வந்த கேதர் ஜாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மனோஜ் திவாரி 17 ரன்களும், ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது அக்லக் 12 பந்துகளில் 40 ரன்களையும், ஆசிஃப் அலி 14 பந்துகளில் 55 ரன்களையும் எடுத்தார்.
அடுத்து வந்த கேப்டன் அஷ்ரஃப் 5 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது.