ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சொதப்பி இருந்த போதிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் யார் என்பதை ரிஷப் பண்ட் நிரூபித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஒரே போட்டியில் இரண்டு சதங்களை விளாசிய இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையயை ரிஷப் பண்ட் பெற்றிருக்கிறார். இங்கிலாந்து அணிக்குஎதிரான ஹெடிங்லி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 140 பந்துகளில் 118 ரன்களை (15 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட) விளாசினார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியின் ஆண்டி ஃபிளவர்-க்கு அடுத்தப்படியாக ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்ற ரிஷப் பண்ட்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் அவர் எல்.எஸ்.ஜி. அணியின் முன்னாள் கேப்டன் கே.எல். ராகுல்-க்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அதன்பிறகு ஆக்ரோஷ மோடிற்கு மாற்றிக் கொண்டு அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். இரண்டாவது இன்னிங்ஸில் ஷோயப் பஷீர் வீசிய பந்தில் ஒரு ரன் ஓடி சதம் கடந்த ரிஷப் பண்ட், சுனில் கவாஸ்கர் கோரிக்கையை மீறி இந்த முறை தனது சொமர்சால்ட் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டார்.
சதம் விளாசிய ரிஷப் பண்ட் குறித்து சஞ்சீவ் கோயங்கா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ரிஷப் பண்ட்-கக்கு தொடர்ச்சியாக இரண்டு நல்ல சதங்கள். ஆக்ரோஷம், துணிச்சல் மற்றும் புத்திசாலித்தனம். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய இரண்டாவது விக்கெட் கீப்பர்,” என குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து “சதம் விளாசிய கே.எல். ராகுலுக்கும் வாழ்த்துகள்,” என்று சஞ்சீவ் கோயங்கா பதிவிட்டுள்ளார்.