மூனா மடிச்சு வச்சுக்கலாம்… மாஸ் காட்ட ரெடியாகும் சாம்சங்… எந்த மாடல் தெரியுமா?

சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் முன்னிலையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ள சாம்சங் அடுத்த வாரம் புதிய தலைமுறை மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 9-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்வில் வைத்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 7 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 7 போன்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் இதே கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் தனது முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய மடிக்கக்கூடிய சாதனத்தை மூன்றாக மடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல முறை சாம்சங் நிறுவனம் மூன்றாக மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்கி வருவது பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில், சாம்சங் தனது மூன்றாக மடிக்கக்கூடிய சாதனத்தை இந்த ஆண்டே அறிமுகம் செய்யும் என்று கூறப்பட்டது. அதன்படி ஜூலை 9-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் சாம்சங் தனது மூன்றாக மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

மூன்றாக மடித்து வைக்கக்கூடிய சாதனங்கள் பிரிவில் ஹூவாய் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக சாம்சங் தனது சாதனத்தை அறிமுகம் செய்யும். ஏற்கனவே ஹூவாய் நிறுவனம் தனது மேட் XT அல்டிமேட் என்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு வழங்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனினை பயனர்கள் மூன்றாக மடித்து வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன டிப்ஸ்டரான இன்ஸ்டன்ட் டிஜிட்டல் வெய்போ தளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் தனது முதல் மூன்றாக மடிக்கக்கூடிய சாதனத்தை ஜூலை 9-ம் தேதி நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் கேலக்ஸி Z போல்டு 7, கேலக்ஸி Z ப்ளிப் 7 மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும்.

முன்னதாக சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S25 எட்ஜ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வுக்காக அறிவித்தது. எனினும், இந்த சாதனத்தின் விற்பனை மே மாதத்தில் தான் தொடங்கியது. அந்த வகையில், சாம்சங் நிறுவனத்தின் முதல் மூன்றாக மடிக்கக்கூடிய சாதனம் வருகிற அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment